×

சிறுபான்மையினர் பள்ளிகளிலும் புதுமைப் பெண் திட்டம் அமல் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

நெல்லை, மே 18: சிறுபான்மையினர் நடத்திவரும் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தை அமல்படுத்துமாறு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நெல்லை வந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கினார். மனு விவரம்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் படிக்க வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும். அதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினர் நடத்திவரும் பள்ளிகளிலும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். இதே போல்அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை மீண்டும் கிடைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மைப் பள்ளிகளில், தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், சம்பளம் பெறாமலேயே அவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நியமன ஒப்புதல் வழங்கி, அவர்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், சிறுபான்மைப் பள்ளி மாணவர்களுக்கும் அந்த உதவிகளை வழங்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர வேண்டிய மாணவர்களுக்கு, 25% இடஒதுக்கீட்டுன் கீழ், அவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இச்சட்டத்திற்கு தமிழக அரசு விதிவிலக்குக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைக் காப்பாற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். சிறுபான்மைப் பள்ளிகளுக்கு கற்பித்தல் மானியத்தில் 6% வரை பராமரிப்பு மானியம் முன்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது, 0.5 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. மீண்டும், முன்புபோல பராமரிப்பு மானியத்தை 6% ஆக வழங்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட சிறுபான்மைப் பள்ளிகளுக்கு கூட நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படாமல், தொடர் அங்கீகாரம் என்ற முறையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அப்பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். சிறுபான்மைப் பள்ளிகளில் கட்டிடச் சான்று 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தீயணைப்பு மற்றும் சுகாதாரச் சான்று ஆண்டுக்கு ஒருமுறையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது இருக்கிறது. இந்த மூன்றையும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கலாம் என்கிற தளர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

The post சிறுபான்மையினர் பள்ளிகளிலும் புதுமைப் பெண் திட்டம் அமல் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ruby Manokaran M ,Minister ,Senji Mastan ,Innovation Girl ,Minority Schools and Innovation Girl Scheme l. PA ,NELLI ,Tamil Nadu Government ,Amal ,Ruby Manokaran M. ,l. PA ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி